செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவல் அறியும் உரிமை சட்டமும் அதன் பயன்பாடும்

தகவல் அறியும் உரிமை சட்டமும் அதன் பயன்பாடும்

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2017ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது என்று அரசு அறிவித்துள்ளது.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இதுவரைக்காலமும் நாம் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது இருந்தது என்பது ரகசியமல்ல.

ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் பெறும் விண்ணப்பங்களை தட்டிக்கழிக்க முடியாது. தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம், ஊழல் மற்றும் உரிமைமறுப்பு போன்றனவற்றை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு. இதனை நிஜப்படுத்த மக்களது ஆர்வமும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

நீண்டகால போராட்டத்தின் பின் அடையப்பெற்றுள்ள இந்த உரிமையை பயன்படுத்துவது எவ்வாறு என்று மக்களுக்கும் தெளிவுபடுத்தும் முயற்சியின் ஆரம்பமாக, தவலறியும் உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அண்டை  நாடுகளில் இருந்து சில உதாரணங்களை  தொடர்ச்சியாக தரவுள்ளோம்.

பங்களாதேஷ்
சைதன்யா குமார் தாஸ் என்பவர் பங்களாதேஷில் உள்ள ஷக்திகாரா மாவட்ட, ரிஷி சமூக கள அமைப்பாளராவார். ரிஷி சமூகம் மிகவும் வறிய நிலையில் உள்ள சமூகமாகும். இந்துக்கள் மத்தியில் மிகவும் தாழ்ந்த சாதியினராக கருதப்படுபவர்கள். சவரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கூட இவர்களுக்கு முடி வெட்டுவதற்கோ, சவரம் செய்வதற்கோ விரும்புவதில்லை.  தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கென அரசு பல சலுகை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தபோதும், ரிஷி சமூகத்துக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை.

சைதன்யாவுக்கு உள்ளூர் ஒன்றிய கவுன்சில் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் ஒருவர் இருந்தார். இந்த கவுன்சிலும் மாவட்ட சமூகசேவை இலாகாவும் இணைந்து “ஒரு மனை ஒரு பண்ணை” அரச திட்டத்துக்கமைய, ஆட்களின் பெயர்களை பதிவு செய்வதாக குறிப்பிட்ட நண்பர் மூலம் அறிந்துகொண்டார்.

அடுத்த நாள் சைதன்யா உள்ளூர் கவுன்சில் அலுவலகத்திற்கு சென்று, தலைவரை சந்தித்து, “ஒரு மனை ஒரு பண்ணை” என்ற அரசு திட்டம் பற்றியும் அதற்காக ஆட்களின் பெயர்களும் பதிவுசெய்யப்பட்டு வருவதாகவும் அறிந்தேன்; “ஐயா, இந்த பதிவுப்பட்டியலில் எனது ரிஷி சமூகத்தவர் எவருடைய பெயராவது பதியப்பட்டுள்ளதா” என்று கேட்டார். அதற்குத் தலைவர் “இப்படி ஒரு திட்டம் இருப்பதாக யார் உனக்கு கூறியது, அப்படி எந்த திட்டமும் இல்லை; இதற்கு முன்னைய திட்டத்தில் கூட உனது சமூகத்தவர் பெயர் எதுவுமில்லை” என்று முகத்தில் அறைந்தது போல் கூறினார். குமார் தாஸ் விடவில்லை; கவுன்சில் தலைவரைப் பார்த்து, “ஐயா, எங்கள் சமூகத்தில் இருந்து ஒரு சிலரையாவது பயனாளிகள் பட்டியலில் இணைத்துக்கொள்ளும் சாத்தியம் உண்டா” என்று மீண்டும் வினவினார். அதற்கு அந்த தலைவர், “நாம் ஏற்கனவே பயனாளிகளை தெரிவுசெய்து, பெயர் பட்டியலை பூர்த்தி செய்து விட்டோம்; இனி எதுவும் செய்வதற்கில்லை; எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று பதில் கூறினார்.

இந்த வாக்குப் பரிமாறலுக்குப் பின்னர், சைதன்யா உடனடியாக அவரது குழு உறுப்பினர் அனைவரையும் அழைத்து கூட்டமொன்றை நடத்தி விடயத்தை எடுத்துரைத்தார். பல உறுப்பினர்களது ஆலோசனைக்கு இணங்க, தகவலறியும் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பயன்படுத்தி, 5 தகவலறியும் விண்ணப்பங்களை, உள்ளூர் சமூக சேவை இலாகாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்தனர். பதிவுத் தபால் மூலம் அதனை அனுப்பியும் வைத்தனர். அந்த விண்ணப்பத்தில் அவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தனர்:

1) 2014ம் ஆண்டில் “ஒரு மனை ஒரு பண்ணை” என்ற அரச திட்டம் ஒன்றுள்ளதா…?

2) அவ்வாறு  உள்ளதாயின், அதன் பயனாளிகளின் பெயர்பட்டியலை, அவர்களது முகவரிகளுடன் தரமுடியுமா…?

இவர்கள் கேட்டிருந்த தகவல்கள் சில தினங்களுக்குள் அவர்களுக்கு கிடைத்தன. அந்த பயனாளிகள் பட்டியலில் அவர்களது ரிஷி சமூகத்தை சேர்ந்த எவருடைய பெயரும் இருக்கவில்லை என்பதை சந்தேகமற அறிந்துகொண்டனர்.

இந்த பதிலைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் கூடி, ஆராய்ந்து, மற்றுமொரு தகவலறியும் விண்ணப்பத்தை அதே அதிகாரிக்கு அனுப்பினர். அதில் “ஒரு மனை ஒரு பண்ணை” திட்ட பயனாளிகளை தெரிவு செய்த அதிகாரிகளின் பெயர்பட்டியலுடன், பயனாளிகள் எந்த சட்டவிதிகளுக்கமைய தெரிவு செய்யப்பட்டனர் என்ற விபரத்தையும் கேட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கவுன்சில் தலைவர் சைதன்யாவையும் அவரது குழுவினரையும் ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். அந்த சந்திப்பில் தலைவருடன் சம்பத்தப்பட்ட அதிகாரிகளும் இருந்தனர். இறுதியில், ரிஷி சமூகத்தை சேர்ந்த பத்து பேர்களின் பெயர்களை பயனாளிகளின் பட்டியலில் இணைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தகவலறியும் உரிமை சட்டத்தின் பலம் என்ன என்பதை அவர்களால் அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

Source : rtiwire.com

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search